Home > வே. ஆனைமுத்து > பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் – தினமணி செய்தி

பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் – தினமணி செய்தி

‘புதுயுகத்தின் சிந்தனைச் சிற்பி’ என யுனெஸ்கோவால் பாராட்டப்பட்டவர் ஈ.வே.ரா. பெரியார். ஆனால் அவருடைய சிந்தனைகள் நூல்வடிவம் பெறுவது அவ்வளவு எளிமையானதாக இல்லை.

அவருடைய எழுத்தும் பேச்சும் நூல்வடிவம் பெறுவதற்கு அரும்பாடுபட்டவர் வே.ஆனைமுத்து. பெரியார் உயிருடன் இருந்த காலகட்டத்திலேயே அதற்கான முயற்சியைத் தொடங்கி மூன்று பெரும் வால்யூம்களாக அதைத் தொகுத்தவர்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள்’ என்ற அந்த நூல் தொகுப்பு மீண்டும் வெளியாக இருக்கிறது. இரண்டாயிரத்து நூறு பக்கங்கள் கொண்ட அது இப்போது இருபது தொகுதிகளாக வெளியாக இருக்கிறது. தம் ஐம்பதாம் வயதில் இந் நூல் தொகுப்பை வெளியிட்ட வே. ஆனைமுத்து இப்போது தம் எண்பத்தாறாம் வயதில் மீண்டும் இந்த முயற்சியை மேற் கொண்டிருக்கிறார்.

அந்த அத்தனைப் பிரதிகளையும் பெரியார் ஒரு பக்கம் விடாமல் வாசித்தார்… அல்லது படிக்கச் சொல்லிக் கேட்டார். கூறியது கூறல் திரும்ப இடம்பெற வேண்டாம் என்று சிலவற்றை நீக்குமாறு சொன்னார். சிலவற்றைச் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக நாங்கள் சேகரித்திருந்த கட்டுரைகளில் இரங்கல் கடிதங்கள் என்று ஒரு பகுதி உண்டு. அதில் நாகம்மை மறைவுக்கு எழுதியதைச் சேர்க்கலாமே என்றார். எப்படியோ விடுபட்டுப் போயிருந்தது. மறுநாளே தேடி எடுத்து அந்தக் கட்டுரையைக் கொண்டு போனேன். வாசிக்கச் சொன்னார். முதல்வரியை வாசித்ததும் இரண்டாம் வரியில் இருந்து அவர் அப்படியே திரும்பச் சொல்ல ஆரம்பித்தார். ‘நாகம்மை இறந்து போனதை ஒரு துணை போயிற்று என்று சொல்வேனா?, ஒரு அமைச்சு போயிற்று என்று சொல்வேனா? ஒரு அடிமை போயிற்று என்று சொல்வேனா? எல்லாம் போயிற்று என்று சொல்வேனா?..’ என அவர் நினைவில் இருந்து சொல்ல ஆரம்பித்துவிட்டார். நாகம்மை இறந்தது 1933-ல். நான் இதை வாசித்துக் காண்பித்தது 1973-ல். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள்.. அவர் தன் தழுதழுத்தக் குரலில் சொல்லி முடித்துவிட்டு கண்கலங்கினார். அது மறக்க முடியாத அனுபவம்.

7.3.70-ல் ஆரம்பித்த இப்பணி 73-ம் ஆண்டில் முடிந்தது. 3.9.73-ல் இதைப் பதிப்பிக்கும் உரிமையை பெரியார் திருச்சி சிந்தனையாளர் கழகத்துக்கு அளித்தார். ஏறத்தாழ அவர் வாசித்து அளித்த எல்லா பக்கங்களிலுமே பெரியார் கையெழுத்திட்டிருக்கிறார். கைப்பட உரிமை வழங்கியும் எழுதிக் கொடுத்தார்.

இரண்டாம் பதிப்புக்கு இவ்வளவு காலதாமதம் ஆனது ஏன் என்று கேட்கலாம். அதற்கு முதல்பதிப்பு வெளியிட்ட அனுபவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். முதல் பதிப்புக்கு ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் செலவாகும் என்று உத்தேசிக்கப்பட்டது. தோழர்களிடமிருந்து திரட்டப்பட்ட தொகை 80 ஆயிரத்தைத் தாண்டவில்லை. வட்டியில்லா கடனாக 20 ஆயிரம் ரூபாயும் வட்டிக்கு அறுபதாயிரம் ரூபாயும் வாங்கி, திருவல்லிக்கேணி கபீர் அச்சகத்தாரிடம் ஒப்படைத்தோம். 500 படிகள் பைண்ட் செய்த நிலையில் அச்சகம் ஏலம் போகவேண்டிய நிலைக்கு ஆனது. அச்சாகியிருந்த பாரங்களை அப்படியே பண்டல்களாகக் கட்டி பத்திரப்படுத்தி வைத்தோம். நூலகத்துக்கு 300 படிகள் மட்டுமே வாங்கப்பட்டது. அதைக் கொண்டு வட்டியில்லா கடனை அடைத்தோம். அதன் பிறகு 79-ம் ஆண்டில் நூலகத்துறையினர் இந் நூல் பிரதிகளை வாங்கிக் கொண்டு, ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கினர். வட்டிக்கு வாங்கிய பணத்தை அடைத்து முடித்தோம். பிரதிகளைப் பாதுகாத்து வைப்பது பெரும்பாடாக இருந்தது.

இப்போதும் முன்பதிவு திட்டத்தின் கீழ் பதிப்பைத் தொடங்கியிருக்கிறோம். இருபது தொகுதிகள் கொண்ட இந் நூல், பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கிறது. வெளியானதும் இதன் விலை 5,300 ரூபாய்க்குக் கிடைக்கும். இப்போது ரூ. 3, 800-க்கு முன்பதிவு திட்டத்தின் கீழ் பதிவு செய்கிறோம். டிசம்பர் மாதம் பதினைந்தாம் தேதி வரை இதற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய தொகுதியைவிட மூன்று சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். முதல் சிறப்பு முன்னர் வந்த தொகுதியைப் போல இரண்டு மடங்கு நூலாக இது தயாராகி வருகிறது. குடியரசு துவங்குவதற்கு முன் நாடார் குலமித்ரன், தி இந்து, சுதேசமித்ரன், திராவிட நாளேடு, சண்ட மாருதம், மாலைமுரசு போன்ற இதழ்களில் வெளியான பேட்டிகள் கட்டுரைகளும் இதில் இடம் பெறுகின்றன.

இரண்டாவது சிறப்பு அப்போதைய பலருடைய பெயர்கள் இப்போது பலருக்குத் தெரியாது. அதனால் அவர்களைப் பற்றிய விவரமான அடிக்குறிப்புகளும் இதில் இடம் பெறுகின்றன.

மூன்றாவது பெரியார் என்றதும் கடவுள் மறுப்பு, பெண் சுதந்திரம், சாதி ஒழிப்பு போன்ற கருத்துகள்தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர் உலக சமுதாயம், மனிதநேயம், சமத்துவம், அறிவியல் வளர்ச்சி உள்ளிட்ட 72 துறைகள் பற்றிப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். அவை இந்த நூல்கள் மூலம் தெரியவரும்.

அவருடைய சிந்தனைகளை நூல்வடிவமாக்க முனைந்த போது பெரியார் குறிப்பிட்ட ஒரே கருத்து கூறியது கூறல் இடம் பெற வேண்டாம் என்பதுதான். அதை அவர் கைப்படவே திருத்தியும் கொடுத்தார். நாங்களும் அதில் கவனமாக இருந்தோம்.

பெரியாரின் எழுத்தும் பேச்சும் நாட்டுடமை ஆக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது காலத்தின் கட்டாயம்” என்றார் ஆனைமுத்து.

நன்றி: தினமணி கதிர்

புத்தக முன் பதிவுக்கு
புத்தகம் பற்றி மேலும் அறிந்துகொள்ள
புத்தகம் பற்றிய பாவலர் வையவனின் கவிதை

  1. November 15, 2009 at 7:01 pm

    பெரியார் ரஷ்யாவுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் போனார் என்று புரட்டை எழுதியவாறு எழுதாமல், நன்றாக தொகுத்தால் நலம் தான்.

  1. No trackbacks yet.

Leave a comment