பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் – தினமணி செய்தி

‘புதுயுகத்தின் சிந்தனைச் சிற்பி’ என யுனெஸ்கோவால் பாராட்டப்பட்டவர் ஈ.வே.ரா. பெரியார். ஆனால் அவருடைய சிந்தனைகள் நூல்வடிவம் பெறுவது அவ்வளவு எளிமையானதாக இல்லை.

அவருடைய எழுத்தும் பேச்சும் நூல்வடிவம் பெறுவதற்கு அரும்பாடுபட்டவர் வே.ஆனைமுத்து. பெரியார் உயிருடன் இருந்த காலகட்டத்திலேயே அதற்கான முயற்சியைத் தொடங்கி மூன்று பெரும் வால்யூம்களாக அதைத் தொகுத்தவர்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள்’ என்ற அந்த நூல் தொகுப்பு மீண்டும் வெளியாக இருக்கிறது. இரண்டாயிரத்து நூறு பக்கங்கள் கொண்ட அது இப்போது இருபது தொகுதிகளாக வெளியாக இருக்கிறது. தம் ஐம்பதாம் வயதில் இந் நூல் தொகுப்பை வெளியிட்ட வே. ஆனைமுத்து இப்போது தம் எண்பத்தாறாம் வயதில் மீண்டும் இந்த முயற்சியை மேற் கொண்டிருக்கிறார்.

அந்த அத்தனைப் பிரதிகளையும் பெரியார் ஒரு பக்கம் விடாமல் வாசித்தார்… அல்லது படிக்கச் சொல்லிக் கேட்டார். கூறியது கூறல் திரும்ப இடம்பெற வேண்டாம் என்று சிலவற்றை நீக்குமாறு சொன்னார். சிலவற்றைச் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக நாங்கள் சேகரித்திருந்த கட்டுரைகளில் இரங்கல் கடிதங்கள் என்று ஒரு பகுதி உண்டு. அதில் நாகம்மை மறைவுக்கு எழுதியதைச் சேர்க்கலாமே என்றார். எப்படியோ விடுபட்டுப் போயிருந்தது. மறுநாளே தேடி எடுத்து அந்தக் கட்டுரையைக் கொண்டு போனேன். வாசிக்கச் சொன்னார். முதல்வரியை வாசித்ததும் இரண்டாம் வரியில் இருந்து அவர் அப்படியே திரும்பச் சொல்ல ஆரம்பித்தார். ‘நாகம்மை இறந்து போனதை ஒரு துணை போயிற்று என்று சொல்வேனா?, ஒரு அமைச்சு போயிற்று என்று சொல்வேனா? ஒரு அடிமை போயிற்று என்று சொல்வேனா? எல்லாம் போயிற்று என்று சொல்வேனா?..’ என அவர் நினைவில் இருந்து சொல்ல ஆரம்பித்துவிட்டார். நாகம்மை இறந்தது 1933-ல். நான் இதை வாசித்துக் காண்பித்தது 1973-ல். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள்.. அவர் தன் தழுதழுத்தக் குரலில் சொல்லி முடித்துவிட்டு கண்கலங்கினார். அது மறக்க முடியாத அனுபவம்.

7.3.70-ல் ஆரம்பித்த இப்பணி 73-ம் ஆண்டில் முடிந்தது. 3.9.73-ல் இதைப் பதிப்பிக்கும் உரிமையை பெரியார் திருச்சி சிந்தனையாளர் கழகத்துக்கு அளித்தார். ஏறத்தாழ அவர் வாசித்து அளித்த எல்லா பக்கங்களிலுமே பெரியார் கையெழுத்திட்டிருக்கிறார். கைப்பட உரிமை வழங்கியும் எழுதிக் கொடுத்தார்.

இரண்டாம் பதிப்புக்கு இவ்வளவு காலதாமதம் ஆனது ஏன் என்று கேட்கலாம். அதற்கு முதல்பதிப்பு வெளியிட்ட அனுபவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். முதல் பதிப்புக்கு ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் செலவாகும் என்று உத்தேசிக்கப்பட்டது. தோழர்களிடமிருந்து திரட்டப்பட்ட தொகை 80 ஆயிரத்தைத் தாண்டவில்லை. வட்டியில்லா கடனாக 20 ஆயிரம் ரூபாயும் வட்டிக்கு அறுபதாயிரம் ரூபாயும் வாங்கி, திருவல்லிக்கேணி கபீர் அச்சகத்தாரிடம் ஒப்படைத்தோம். 500 படிகள் பைண்ட் செய்த நிலையில் அச்சகம் ஏலம் போகவேண்டிய நிலைக்கு ஆனது. அச்சாகியிருந்த பாரங்களை அப்படியே பண்டல்களாகக் கட்டி பத்திரப்படுத்தி வைத்தோம். நூலகத்துக்கு 300 படிகள் மட்டுமே வாங்கப்பட்டது. அதைக் கொண்டு வட்டியில்லா கடனை அடைத்தோம். அதன் பிறகு 79-ம் ஆண்டில் நூலகத்துறையினர் இந் நூல் பிரதிகளை வாங்கிக் கொண்டு, ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கினர். வட்டிக்கு வாங்கிய பணத்தை அடைத்து முடித்தோம். பிரதிகளைப் பாதுகாத்து வைப்பது பெரும்பாடாக இருந்தது.

இப்போதும் முன்பதிவு திட்டத்தின் கீழ் பதிப்பைத் தொடங்கியிருக்கிறோம். இருபது தொகுதிகள் கொண்ட இந் நூல், பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கிறது. வெளியானதும் இதன் விலை 5,300 ரூபாய்க்குக் கிடைக்கும். இப்போது ரூ. 3, 800-க்கு முன்பதிவு திட்டத்தின் கீழ் பதிவு செய்கிறோம். டிசம்பர் மாதம் பதினைந்தாம் தேதி வரை இதற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய தொகுதியைவிட மூன்று சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். முதல் சிறப்பு முன்னர் வந்த தொகுதியைப் போல இரண்டு மடங்கு நூலாக இது தயாராகி வருகிறது. குடியரசு துவங்குவதற்கு முன் நாடார் குலமித்ரன், தி இந்து, சுதேசமித்ரன், திராவிட நாளேடு, சண்ட மாருதம், மாலைமுரசு போன்ற இதழ்களில் வெளியான பேட்டிகள் கட்டுரைகளும் இதில் இடம் பெறுகின்றன.

இரண்டாவது சிறப்பு அப்போதைய பலருடைய பெயர்கள் இப்போது பலருக்குத் தெரியாது. அதனால் அவர்களைப் பற்றிய விவரமான அடிக்குறிப்புகளும் இதில் இடம் பெறுகின்றன.

மூன்றாவது பெரியார் என்றதும் கடவுள் மறுப்பு, பெண் சுதந்திரம், சாதி ஒழிப்பு போன்ற கருத்துகள்தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர் உலக சமுதாயம், மனிதநேயம், சமத்துவம், அறிவியல் வளர்ச்சி உள்ளிட்ட 72 துறைகள் பற்றிப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். அவை இந்த நூல்கள் மூலம் தெரியவரும்.

அவருடைய சிந்தனைகளை நூல்வடிவமாக்க முனைந்த போது பெரியார் குறிப்பிட்ட ஒரே கருத்து கூறியது கூறல் இடம் பெற வேண்டாம் என்பதுதான். அதை அவர் கைப்படவே திருத்தியும் கொடுத்தார். நாங்களும் அதில் கவனமாக இருந்தோம்.

பெரியாரின் எழுத்தும் பேச்சும் நாட்டுடமை ஆக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது காலத்தின் கட்டாயம்” என்றார் ஆனைமுத்து.

நன்றி: தினமணி கதிர்

புத்தக முன் பதிவுக்கு
புத்தகம் பற்றி மேலும் அறிந்துகொள்ள
புத்தகம் பற்றிய பாவலர் வையவனின் கவிதை

தோழர் ஆனைமுத்துவுடன் ஓர் சந்திப்பு!

இம்முறை தமிழகம் போகும் போது கண்டிப்பாக தோழர் ஆனைமுத்துவையும் [1] சந்தித்துவிட வேண்டுமென்று நினைத்திருந்தேன். அதற்கேற்றார் போல் வாய்ப்பும் கிடைத்தது.

பாண்டிச்சேரியில் மகள் வீட்டுக்கு வந்திருப்பதாகச் செய்தி கிடைத்தும் அப்பாய்ண்ட்மென்ட் வாங்கி வைத்துவிட்டார்கள் தோழர்கள். காலை பத்து மணியளவில் அவருடைய மகள் வீட்டுக்குச் சென்றோம். பெரியாருடன் இருந்த முதிய தோழரை சந்திக்கப் போகிறோம் என்னும் பதட்டமும், ஆவலும் அதிகமாக இருந்தது.

1952-இல் இருந்து பெரியாருடன் இணைந்து தீவிரமாக இயக்கப்பணிகளை செய்துக் கொண்டிருந்தவர் தோழர் ஆனைமுத்து. 1963-இல் இருந்து தினமும் பெரியாருடன் இணைந்திருக்கும் வாய்ப்பை பெற்றிருந்தவர். 1957-இல் நடந்த சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் 18-திங்கள் கடும் தண்டனையாக சிறையில் அடைக்கப்பட்டவர்.  1974-இல் பெரியாரின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் தொகுத்து பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் என்று தொகுதிகளாக வெளியிட்டவர்.

1975-இல் தி.க தலைமையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் தி.க வில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு பிறகு இன்னும் தீவிரமாக இயங்கியவர் தோழர் ஆனைமுத்து. நாம் அவரை சந்திக்க சென்ற போது கூட பெரியாரின் சிந்தனைகளை மீண்டும் நூல்களாக வெளியிடும் பணியில் இருப்பதாக அறிந்தோம்.[2]

84-வயதான தோழர் ஆனைமுத்து இன்னமும் கொள்கைப்பிடிப்புடனும் அதை செயல்படுத்துவதிலும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டிருந்தேன். அவருடன் இருந்த சில மணிநேரங்களில் அத்தனையும் உண்மைதான் என்பதை உணர்ந்தேன்.

அருகில் இருந்த உதவியாளரிடம் ´சிந்தனையாளன்´ பத்திரிகை பணிகள் குறித்து பேசுவதும், அடிக்கடி வரும் தொலைபேசிகளுக்கு பதில் அளித்துக் கொண்டும், எம்மோடும் பேசிக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருந்தார். எந்த கேள்வி கேட்டாலும் வருடம், தேதி என ஆதாரத்தோடு பேசுகிறார். அவரின் நினைவாற்றல் அபாரமாக இருக்கிறது. எதையும் யோசித்து பேசுவதில்லை. சடசடவென பதில்கள் வருகிறது.

இந்தியக் கல்வி திட்டம் குறித்து பேசிக் கொண்டிருந்தோம்.

பொதுக்கல்வி, அறிவியல் கல்வி, தொழில் நுட்பக் கல்வி இவற்றில் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், அந்த படிப்பின் காரணமாக படித்தவர்கள் எல்லாம் பகுத்தறிவாளர்களாகவில்லை. இதுதான் இன்றைய இந்தியாவின் இருப்பு நிலையாக இருக்கின்றதே. ஏன்?” என்ற கேள்வியை முன்வைத்தோம்.

இந்தியாவிலுள்ள எல்லா வகுப்பினருக்கும் விகிதாச்சார இட ஒதுக்கீடு, இந்திய அரசாங்கக் கல்வி, இந்திய அரசாங்க வேலை, மாநில அரசாங்கக் கல்வி, மாநில அரசாங்க வேலை ஆகியவற்றில் கிடைத்திட வகை செய்வதற்கு ஏற்ப அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்று 1978-இல் இருந்து கிட்டத்தட்ட 30-ஆண்டுகளாக பீகார், உத்திரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், அசாம், டில்லி, ஆந்திரா, கேரளா முதலான மாநிலங்களுக்கும் சென்று பரப்புரை கிளர்ச்சி செய்து வரும் தோழர் ஆனைமுத்துவிடம், இந்தியக் கல்வித் திட்டத்தைக் குறித்து பேசும் தகுதியும், சிந்தனையும் இருப்பதால் இந்தியக் கல்வித் திட்டத்தைக் குறித்த கேள்வியை முன்வைத்தோம்.

தோழர் ஆனைமுத்துவும் தெளிவாக இந்திய கல்வி குறித்து விளக்கினார்.

கல்வித் திட்டத்தில் தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் மதநம்பிக்கை சார்ந்த கல்வியே கற்பிக்கப்படுகிறது. அரசாங்க கல்வியிலும் அப்படியே. தனியார் கல்வியிலும் அப்படியே. மதநிறுவனங்கள் சார்பிலும் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களும் அப்படியே. இப்படிப்பட்ட கல்வி திட்டத்தின் கீழ் எவ்வளவு காலத்திற்கு கல்வி பெறுகிறார்கள். பகுத்தறிவு பெற்றுக் கொள்ள வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது.

பெரியார் இயக்கம் போன்ற வெளியில் உள்ள தூண்டுதல் காரணமாக படித்தவர்கள், படிக்காதவர்கள் இவர்களுள் எப்போதுமே ஒரு சில பேர் மட்டுமே பகுத்தறிவாளர்களாக உருவாக முடியும்.

பெரியார் 50-ஆண்டுகள் பரப்புரை செய்த பிறகு இப்போது அவருடைய இயக்கத்தினர் அதேக் கொள்கையை பரப்புரை செய்த பிறகு 80-ஆண்டுகள் கழித்து மிகச் சிலரே பகுத்தறிவாதிகளாக இருக்கிறார்கள். படிப்புத் திட்டம் இப்படி இருக்கிற வரையில் இதே நிலைமை தான் நீடிக்கும் இதை அடியோடு மாற்றுவதற்கு பெரியார் சொன்ன வழி

1-கல்வி என்பது அரசாங்கத்தினால் மட்டுமே தரப்பட வேண்டும்.
2-கல்வியில் இருந்து மதம் என்பது அறவே பிரிக்கப்பட வேண்டும்.
3-அரசின் அன்றாட நடப்பில் இருந்து மதம் பிரிக்கப்பட வேண்டும்.

இப்படிப்பட்ட நிலை உருவாக்கப்பட்டாலன்றி பகுத்தறிவு வளராது. இன்றுள்ள நிலையே நீடிக்கும்.

இந்தியாவில் கல்வி அரசினால் மட்டுமே கல்வி தரப்படும் நிலையை பெரியார் தொணடர்கள் உண்டாக்க வேண்டும். அப்படி தரப்படும் கல்வி, மதம் சாராத கல்வியாக இருக்கும்படி பெரியார் தொண்டர்கள் முயற்சிக்க வேண்டும். அப்படிப்பட்ட அரசை பெரியார் தொண்டர்கள் உருவாக்க வேண்டும்.

திராவிடர் கட்சி ஆட்சியாக எது இருந்தாலும் அந்தக் கட்சி ஆட்சி தனக்கென்று ஒரு கல்விக் கொள்கையை கொண்டிருக்க முடியாது. இந்திய அரசு வகுக்கும் கல்விக் கொள்கையை ஏற்றதான் ஒவ்வொரு மாநில அரசும் கல்வியைத் தர வேண்டும்.

இந்த நிலை மாற்றப்படுவது மிகவும் இன்றியமையாதது. இன்றைக்குள்ள அமைப்பில் தமிழ்நாடு மட்டுமோ, இன்னொரு மாநிலம் மட்டுமோ தனியாக முயற்சித்து இப்படிப்பட்ட மாற்றங்களை கொண்டுவர முடியாது. எனவே பெரியார் அவர்கள் 1971-இல் அறிவுறுத்தியபடி திராவிடர் இயக்கம் அகில இந்திய இயக்கமாக உருவாக்கப்பட வேண்டும். இந்த அறிவுரையையும் பெரியார் தொண்டர்கள் அறிந்திருக்கப்படவில்லை. திராவிட வாக்கு வேட்டை கட்சிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

இந்தியாவில் ஆட்சி வடிவங்கள் மாறினாலும், ஆளும் கட்சிகள் மாறினாலும் ஆளும் வர்க்கத்தால் காலந்தோறும் மாறினாலும் அவர்களை இயக்குகின்ற இந்திய அரசு என்னும் இயந்திரம் மதத்தையும் மதம் சார்ந்த கல்வியையும் மதம் சார்ந்த விழாக்களையும், பண்டிகைகளையும் அழியாமல் பார்த்துக் கொள்வதை நோக்கமாகவே கொண்டவையாகும்.

தோழர் ஆனைமுத்துவின் இந்திய கல்வி குறித்த சிந்தனையில் நமக்கும் எந்த ஆட்சேபமும் இருக்காது. மிகத் தெளிவான தற்போதைய நிலையை விளக்கி இருக்கிறார். அப்படியானால் இந்திய அரசு இந்து சாஸ்திரங்களையும், இந்து மத அரசமைப்புச் சட்டங்களையும் பாதுகாப்பதில் இன்னும் தீவிரமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறதா?

கண்டிப்பாக என்கிறார் தோழர் ஆனைமுத்து.

“எடுத்துக்காட்டாக பாருங்கள், பெரியார் சுயமரியாதை இயக்கம் தோற்றுவித்த காலத்தில் 1926-இல் (26.12.1926) திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு ஆண்டு வருமானம் 20-இலட்ச ரூபாய். அன்றைய பவுன் விலை 15-ரூபாய் இன்று 80-ஆண்டு பகுத்தறிவு பிரசாரம் முடிந்த பிறகு திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு ஆண்டு வருமானம் 1,600-கோடி ரூபாய். காணிக்கை வருமானம் 20-கோடி ரூபாய். இவையில்லாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் ஏறக்குறைய 32-ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி நகைகள் வெங்கடேச பெருமாளுக்கு சொந்தமாக இருக்கின்றன. இவ்வளவு பெரிய அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்களை உடைமைகளாக வைத்துக் கொள்ள வெங்கடாசலப்பதி என்னும் கல்பொம்மைக்கு சட்டப்படி உரிமை உண்டு. அதாவது உயிர் இல்லை, உண்பது இல்லை, குடும்பம் நடந்துவது இல்லை என்றாலும் சொத்து வைத்துக் கொள்வது என்கிற அந்த காரியத்தை செய்வதற்கு மட்டும் ´வெங்கடாசலபதி´ சட்டப்படி உரிமை உள்ள மனிதனாக கருதப்பட்டு சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஏற்பாட்டை இந்து சாஸ்திரங்கள், இந்து மதம், இந்து சட்டம், அரசமைப்புச் சட்டம் எல்லாம் 2009-இல் காப்பாற்றுகின்றன” என்கிறார் தோழர் ஆனைமுத்து.

அடுத்து பெண் விடுதலை குறித்த கேள்வியை எழுப்பினோம்..

“இந்தியாவில் உள்ள பெண் விடுதலை இயக்கங்கள் ஒவ்வொரு ஆணையும் கணவன் என்ற நிலையில் வைத்து ஒவ்வொரு கணவனும் மனைவிக்கு இழிக்கிற சித்திரவதைகள், கொடுமைகள், வன்புணர்ச்சி, உரிமை மறுப்பு இவற்றை மட்டுமே மையமாக வைத்து இவற்றில் இருந்தே விடுதலை பெற வேண்டும் என இயங்குகின்றன. ஆனால் இவை மட்டுமே போதாது. ஒவ்வொரு பெண்ணையும் குடும்பத் தலைவி என்று மட்டும் சித்தரித்து விட்டு, சமையல் வேலை, வீட்டு வேலை, பிள்ளை பெறும் வேலை, பிள்ளை வளர்க்கும் வேலை, இவ்வளவு கால்கட்டுக்களை போட்டு விட்டு பெண்ணுக்கு சமகல்வி, உரிமை மறுத்தல், சொத்தில் பங்குதர மறுத்தல், துணைவரைத் தேடிக் கொள்ள உரிமை தரமறுத்தல், மறுமணம் பெறும் உரிமையை மறுத்தல் முதலான மதம் சார்ந்த கொடுமைகளை எதிர்ப்பதில்லை. அத்துடன் சொத்து, வேலை வாய்ப்பு, உயர் படிப்பு இவற்றில் சமபங்கு அதாவது 50% விழுக்காடு வேண்டும் என்று போராடுவது இல்லை. இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியது மட்டுமே பெண் விடுதலை போராட்டம் ஆகும். இது சமதர்ம அரசு அமைப்பு அமைக்கப்படுவதிலேயே சாத்தியமாகும்”

என்று இந்தியப் பெண்களின் விடுதலை குறித்த கருத்தை சுருக்கமாக கூறினார் தோழர் ஆனைமுத்து.

பெண் விடுதலைக் குறித்து இன்றைய பெண்களின் பெண்ணுரிமைச் சிந்தனை என்பது எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் தோழர்…

“இந்தியாவில் குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்கள், மலைவாழ் வகுப்பு பெண்கள், இஸ்லாமியப் பெண்கள் கல்வி பெறாதவர்களாக வைக்கப்பட்டிருக்கின்றனர். முதலில் இந்த நிலையை மாற்ற வேண்டும்.
திருத்தப்பட்ட இந்து சட்டப்படி இந்து பெண்களுக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள எல்லா உரிமைகளும் நடைமுறையில் உரிமை இயல் துறையில் செயல்பாட்டுக்கு வர அரசும், மக்களும், கட்சிகளும் இணைந்து வழிகாண வேண்டும். உள் சாதிக்குள் திருமணம் செய்து கொள்ளும் அகமண முறை மாறுவதற்கு சட்டத்தில் தடை இல்லை. ஆனால் நடப்பில் வரவில்லை. இவையெல்லாம் பற்றி முதலில் உயர்நிலை கல்வி திட்டத்தில் விரிவான பாடங்கள் வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இன்னும் ஒரு தலைமுறைக் காலத்திலாவது பெண்கள் தாங்களே உரிமைக்கு போராட வருவார்கள்.

பெண்கள் உரிமைக்காக ஆண்கள் போராடுவார்கள் என எப்போதும் நினைக்கக் கூடாது. வீடுதோறும் நடைப்பெறுகின்ற பார்ப்பனியச் சடங்குகள், புரோகிதரை அழைக்கும் சடங்குகள் நிறுத்தப்பட வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் காலகாலமாக நடைபெறுவது உயர்ந்தது மேலானது என்னும் மூடநம்பிக்கை மக்களிடமிருந்து ஒழியும். இத்துடன் பெண்களுக்கு சட்டமன்றங்கள், நாடாளுமன்றம், ஊராட்சி மன்றங்கள், அரசு அலுவலகங்கள் பெண்மக்களுக்கு சரி பாதி 50% விழுக்காடு ஒதுக்கி கொடுக்கப்பட சட்டப்படி ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.”

என்று தோழர் ஆனைமுத்து தமது பெண்ணிய சிந்தனைகளை எம்முடன் பகிர்ந்து கொண்டார். தற்போதைய தி.க அமைப்பு மற்றும் பெ.தி.க செயல்பாடுகளைக் குறித்து கருத்து கேட்ட போது அவற்றைக் குறித்து கருத்து தெரிவிக்க விருப்பம் இல்லை என்றார்.

பெரியார் சிந்தனைகள் மீண்டும் புத்தகமாக கொண்டுவரும் முயற்சியில் இருக்கும் தோழர் ஆணைமுத்துவின் சீரிய பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. “பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்” இரண்டாம் பதிப்பு 2010- பிப்ரவரியில் வெளியிடப்பட உள்ளது.

*ஆனைமுத்து பற்றிய குறிப்புகள் [1]
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

*பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் இரண்டாம் பதிப்பு முன்பதிவுத் திட்டம்! [2]
https://sinthanaiyaalan.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/

 

நன்றி: தமிழச்சி

தொகுப்பு: தமிழச்சியின் தளத்திலிருந்து

பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் இரண்டாம் பதிப்பு முன்பதிவுத் திட்டம்

முன் பக்கம்

evrthotsfr

பின் பக்கம்

evrthotsbackமேலதிக தகவலுக்கு இங்கே பார்க்கவும்

புத்தகம் பற்றிய பாவலர் வையவனின் கவிதை